ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த் கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த ‘சிவாஜி, எந்திரன்’ ஆகிய படங்களின் பாடல்களுக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. அந்தக் கூட்டணி இப்போது ‘2.0’ படத்திலும் மீண்டும் இணைந்துள்ளது. அப்போதை விட இப்போது சமூக வலைத்தளங்கள், யு டியூப் என இணைய வழி பரிமாற்றம் அதிகம் இருந்தாலும் ‘2.0’ பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
கடந்த அக்டோபர் 28ம் தேதியன்று யு டியூபில் ‘2.0’ படத்தின் இரண்டு பாடல்களின் ஜுக் பாக்ஸ் வெளியானது. அதற்கு இதுவரை 25 லட்சம் பார்வைகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதாவது, பாடல்களை அவ்வளவு பேர் மட்டுமே கேட்டுள்ளார்கள். அதே சமயம், அதற்கு இரண்டு நாள் முன்னதாக வெளியான சூர்யா நடிக்க அனிருத் இசையமைத்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு…’ பாடல் வீடியோவிற்கு 42 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. அதாவது, ‘2.0’ பார்வை எண்ணிக்கையை விட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகம்.
காலம் மாற மாற ஏ.ஆர்.ரகுமான் இசைக்கான மவுசும் தற்போது குறைந்து வருகிறதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார் என இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் இருந்தும் ‘2.0’ பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.